ஆப்நகரம்

ஆஸ்திரேலிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஆட்டின் மரணம்!!

உலகிலேயே அதிகமான ரோமத்தை கொண்டிருந்த செம்மறி ஆடு இறந்தது ஆஸ்திரேலிய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 23 Oct 2019, 8:20 pm
உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ஆடு, மாடு, கோழிகள் இறைச்சிக்காக நாள்தோறும் வெட்டப்படுகின்றன. இதில் ஒரு செம்மறி ஆடு இறந்ததெல்லாம் ஒரு செய்தியா? என்ற கேள்வி நமக்கு எழலாம்.
Samayam Tamil s2


ஆனால், ஆஸ்திரேலியாவின் தலைநகரான கேன்பராவைச் சேர்ந்த கிறிஸ் என்ற செம்மறி ஆடு, நான்காண்டுகளுக்கு முன் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

மெரினோ எனும் இனத்தைச் சேர்ந்த இந்த வகை ஆடுகளின் உடம்பில் ரோமம் வளர்வது இயல்பு. ஆனால், தற்போது இறந்துள்ள கிறிஸ் ஆட்டின் உடலில் வழக்கத்தைவிட அபரிமிதமாக ரோமம் வளர்ந்தது.
இதன் காரணமாக, கடந்த 2015 - ஆம் ஆண்டு, கிறிஸ் உலகின் கவனத்தை ஈர்த்தது.

கிறிஸின் உடம்பில் இப்படி அபரிமிதமாக ரோமம் வளர்ந்ததற்கான காரணத்தை கால்நடை மருத்துவர்களாலேயே அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. இதன் விளைவாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தது.

இதனால், கிறிஸ் மேற்கொண்டு உயிர் வாழ்வது சிரமம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், கிறிஸின் உடம்பிலிருந்து ஒரே சமயத்தில் 41.1 கிலோகிராம் அளவில் ரோமம் வெட்டி எடுக்கப்பட்டது. அதையடுத்து, இந்த செம்மறி ஆடு இதுநாள் வரை உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.

கம்பளிக்காக, செம்மறி ஆடுகளின் உடம்பிலிருந்து ரோமம் வெட்டி எடுக்கப்படுவது வழக்கமான நிகழ்வு தான் என்றாலும், ஒரே நேரத்தி்ல் 40 கிலோகிராம் அளவுக்கு ரோமம் வெட்டி எடுக்கப்பட்டது, கிறிஸ் என ஆஸ்திரேலிய மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட செம்மறி ஆட்டின் உடலில் இருந்து தான்.

இத்தகைய சாதனையுடன் வலம் வந்துக் கொண்டிருந்த செம்மறி ஆடு தான் வாயோதிகம் காரணமாக, தனது 10 -ஆவது வயதில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) இறந்தது. கிறிஸின் மரணம் ஆஸ்திரேலிய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி