ஆப்நகரம்

இவங்க ஆட்சிக்கு வந்தால், அகதிகள் தொல்லை தாங்க முடியாது: ஆஸி., அமைச்சர் பீட்டர் டட்டன்!

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு ஆஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வரத்தொடங்கும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்திருக்கிறார்.

Samayam Tamil 12 May 2019, 1:02 pm
மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அகதிகளின் முகாம்கள், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற அகதிகளை, சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைத்துள்ள ஆஸ்திரேலியாவை ஆளும் லிபரல் அரசாங்கம், அவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் குடியேற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து வருகிறது.
Samayam Tamil Aus Refugees


மனுஸ் மற்றும் நவுருத்தீவு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான திட்டத்தை நியூசிலாந்து அரசு தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து முன்வைத்துள்ள கோரிக்கை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும், அதே சமயம் அதை ஏற்றுக்கொள்வது ஆஸ்திரேலியாவின் நலனுக்கு சரியானதாக இருக்காது என்றும் பீட்டர் டட்டன் தெரிவித்திருக்கிறார்.

நியூசிலாந்து அரசின் திட்டத்தின் படி, தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை நியூசிலாந்தில் குடியேற்றினால் அது அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் பின்கதவு வழியாக அனுமதிப்பது போல ஆகிவிடும்.

ஏனெனில், நியூசிலாந்தில் குடியுரிமை பெறும் எவரும் ஆஸ்திரேலியாவுக்கு எளிமையாக வந்துவிடலாம் என்ற நடைமுறை உள்ளது, எனக் கூறியுள்ள டட்டன், அது இந்த சிக்கலில் பிரச்னையாக மாறிவிடும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் 46வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, வரும் மே 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி