ஆப்நகரம்

ரிஷி சுனக்கிற்கு ஒத்துழைப்பு தாருங்கள்: போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்!

இங்கிலாந்து புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு ஒத்துழைப்பு தருமாறு முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 25 Oct 2022, 5:25 pm
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் ராஜினாமாவையடுத்து அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ், பதவியேற்ற 6 வாரங்களிலேயே ராஜினாமா செய்து விட்டார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக்
போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக்


இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த முறை நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை 100 எம்.பி.க்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரே தேர்தலில் போட்டியிட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவை பெற்று இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை அவர் சந்தித்தார். முறைப்படி, இங்கிலாந்தின் நிர்வாகத் தலைமை பொறுப்பை ஏற்றுகும்படி ரிஷி சுனக்கை மன்னர் மூன்றாம் சார்லஸ் அழைத்தார். தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் ரிஷி சுனக் - வரலாற்றில் முதன்முறை!
அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு ஒத்துழைப்பு தருமாறு கன்சர்வேட்டிவ் கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகள். கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் ஒவ்வொரும், நமது புதிய பிரதமருக்கு முழு மனதுடன் ஆதரவளிக்க வேண்டிய தருணம் இது. அவருக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் ரேஸில், ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி மோர்டாண்ட் உள்ளிட்ட மூவர் இருந்தனர். பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சியை தன்னால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறி, ரிஷி சுனக்கை போரிஸ் ஜான்சன் பின்வாங்க சொல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி