ஆப்நகரம்

கொரோனாவைத் தொடங்கி வைத்த வுஹான்; இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

வுஹான் நகரில் நோய்த் தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 8:22 am
உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரோனா வைரஸின் தொடக்கம் சீனாவில் தான் ஏற்பட்டது. அந்நாட்டின் வுஹான் நகரில் உள்ள கடல் உணவு மற்றும் இறைச்சி விற்கும் கடை ஒன்றில் இருந்து பரவத் தொடங்கிய வைரஸ், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. இதன் பாதிப்பால் உலகப் பொருளாதாரமே பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், வழிபாட்டுக் கூடங்கள் உள்ளிட்டவை அனைத்தும் மூடப்பட்டன.
Samayam Tamil Colleges Open in Wuhan


நாடு முழுவதும் பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. வீடு, வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து வுஹான் நகரில் நிலைமை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.

எல்லா பள்ளிகளும் திறப்பு; பிள்ளைகளை கண்டிப்பாக அனுப்பணும்- அடம்பிடிக்கும் பிரதமர்!

முன்னதாக பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. போதிய சரீர இடைவெளி, முகக்கவசங்கள், கை சுகாதாரம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அடுத்த வாரம் வுஹானில் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களது சுகாதார அறிக்கையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தி இருந்தால் தான் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வுஹான் பல்கலைக்கழகத்திற்கு 9,000 மாணவர்கள் வந்து சேர்ந்தனர். மேலும் 20,000 மாணவர்கள் அடுத்தக்கட்டமாக வருகை புரிய உள்ளனர்.

கொரோனா: யாரெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும் - புதிய விளக்கம்

ஆனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வுஹான் செல்ல அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது. ஹூபேயில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் சீன அரசு அனுமதிக்கும் வரை அந்நாட்டிற்கு திரும்ப முடியாது.

அடுத்த செய்தி