ஆப்நகரம்

நாடு பற்றி எரியும்போதும் அதிபர் தேர்தலில் குறியாக இருக்கும் ட்ரம்ப்!!

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய ட்விட்டர் பதிவுகள், அதிபர் தேர்தலில் தாம் வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே அவர் செயல்பட்டு வருவதை உணர்த்துவதாக உள்ளன.

Samayam Tamil 2 Jun 2020, 10:41 am
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தை, காலணி அணிந்த தன் காலால் மிதித்த காட்சி, சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அத்துடன், ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணச் செய்தி, அந்நாட்டு மக்களை இனவெறிக்கு எதிராக கொதித்தெழ செய்துள்ளது.
Samayam Tamil trump


ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல் துறையின் வன்முறைக்குப் பலியானார் என்ற செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவவே, ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களாக தொடரும் பொதுமக்களின் இந்தப் போராட்டங்கள், வெள்ளை மாளிகை உள்ளிட்ட இடங்களில் வன்முறையாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. மினியாபொலீசில் துவங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களிலும் வன்முறை சம்பவங்களாக அரங்கேறி வருகிறது.

போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பது, கட்டடங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவது என நிறவெறிக்கு எதிராக பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமீபத்திய ட்விட்டர் பதிவுகள், அவர் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதி்ல் மட்டுமே குறியாக உள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

பாதாள அறையில் ஒளிந்து கொண்ட ட்ரம்ப்; வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த பரபரப்பின் பின்னணி!

இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் உச்சமாக, பொதுமக்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி அதிபர் ட்ரம்ப் தமது குடும்பத்துடன் அங்குள்ள பதுங்கு குழிக்குள் அடைக்கலம் ஆனார் என்ற செய்தி, அமெரிக்கா மட்டுமன்றி உலகம் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது.

ஆனால், இதனை "பொய் செய்தி" (FAKE NEWS) என்று கூறிய ட்ரம்ப்,, "NOVEMBER 3RD" என்று ஆங்கில கொட்டெழுத்துக்களில் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அதிபர் தேர்தலில் தம்மை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டு வருபவை என்பதை NOVEMBER 3RD என்ற தமது ரத்தின சுருக்கமான ட்விட்டர் பதிவின மூலம் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, "இனவெறியை மையமாக கொண்டு தற்போது அரங்கேறிவரும் வன்முறை வெறியாட்டங்களுக்கு 'அன்டிஃபா' எனும் இடதுசாரி அமைப்புதான் காரணம் "என்று தமது மற்றொரு ட்விட்டர் பதிவில் பகிரங்கமாக தெரிவித்துள்ள ட்ரம்ப், "இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் தடைவிதிக்கப்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், "இனவெறிக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில், இடதுசாரி அமைப்பினர் சிலர், சிறைகளில் இருந்து அராஜகவாதிகளை ஜாமீனில் வெளியே கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் உண்மை நோக்கம் குறித்து பாவம் உறக்கத்தில் இருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதுவும் தெரியாது.

உண்மையில் அவருக்கு பின்னணி இருப்பவர்கள் இடதுசாரி அமைப்பினர்தான். எனவே, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும்; அனைத்துவித வரிகள் உயர்த்தப்படும் அபாயமும் உள்ளது" என்று தமது மற்றொரு ட்விட்டர் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இனவெறிக்கு எதிராக நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும்போது, இவற்றுக்கு அதிபராக சமூக தீர்வு காண முயற்சிக்காமல், இப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி வருவதன் மூலம், நாட்டில் எந்த சம்பவம் நடைபெற்றாலும் பரவாயில்லை. அதனை தமது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே அதிபர் ட்ரம்ப் செயல்படுகிறாரோ என சந்தேகத்தை அவரது ட்விட்டர் பதிவுகள் உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அடுத்த செய்தி