ஆப்நகரம்

7,000 பேருக்கு வேலை - முதல் மெட்ரோ ரயிலை ஓட விட்ட பாகிஸ்தான்!

நாட்டின் முதல் மெட்ரோ ரயிலை பாகிஸ்தான் அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

Samayam Tamil 26 Oct 2020, 4:38 pm
போக்குவரத்து நவீனமயமாகி வரும் சூழலில், அவற்றை தங்கள் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது சம்பந்தப்பட்ட அரசுகளின் கடமை. அந்த வகையில் சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தின் கீழ் ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சீன ஸ்டேட் ரயில்வே குரூப், சீன நார்த் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன், நாரின்கோ இண்டர்நேஷனல் மற்றும் தாவூ பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் பஸ் சர்வீஸ் ஆகியவை இணைந்து கட்டமைத்துள்ளன. மொத்தம் 27 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் மெட்ரோ ரயிலானது 26 ரயில் நிலையங்களை கடந்து செல்கிறது.
Samayam Tamil Lahore Metro


இதில் இரண்டு நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைந்துள்ளன. 27 செட் மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் ஏசி வசதியுடன் கூடிய 5 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். தினசரி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பயணிக்கலாம்.

இதைக் கட்டமைக்க 5 ஆண்டுகள் ஆன நிலையில், உள்ளூரைச் சேர்ந்த 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்காக மேலும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்நாட்டு போர்? என்னதான் நடக்கிறது?

இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பஞ்சாப் மாநில முதல்வர் சர்தார் உஸ்மான் புஸ்தார், ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் சேவையானது நாட்டின் முதல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து சேவையாகும். இதன்மூலம் லாகூர் மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவையை அளிக்க முடியும்.

இது பசுமையான ஜிடிபி வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம் என்றார். இதையடுத்து பேசிய சீன கவுன்சல் ஜெனரல் லாங் திங்பின், CPEC சாதனைகளில் பாகிஸ்தான் ஆரஞ்சு லைன் மெட்ரோ சேவையும் ஒன்று. இது லாகூரின் போக்குவரத்தை மேம்படுத்த உதவும். நகரின் புதிய அடையாளமாக மாறியுள்ளது என்று கூறினார்.

அடுத்த செய்தி