ஆப்நகரம்

ஏப்ரல் 23: புத்தக தினமாக மாறிய காதலர் தினத்தின் கதை

ஸ்பெயினில் ஆண்டுதோறும் ​ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்த “ரோஸ் டே” என்னும் முறையிலிருந்துதான் புத்தக தினம் பிறந்தது.

Samayam Tamil 23 Apr 2020, 11:58 am
கொரோனாவால் உலகம் மொத்தமும் ஏறக்குறைய முடங்கியிருக்கும் வேளையில், பயனுள்ள பொழுதுபோக்குகளில் புத்தக வாசிப்பு முதன்மையானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்நிலையில், உலக புத்தக தினம் (world book day ) இன்று கடைபிடிக்கப்படுகிறது.
Samayam Tamil World Book Day


மனித இனம் தன்னைக் குறித்தும், தன் வாழ்சூழல் குறித்தும் சிந்திக்கத் தொடங்கியபோது, அதை இன்னொருவருக்கும் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. பயணப்படும்போதெல்லாம் கதைகளும் உடன்வரவேண்டிய தேவை இருந்தது. இந்தத் தேவைதான், புத்தகங்களின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தது.

அன்று முதல் இன்று வரை, ஆவணங்களாக மனித குலத்துடன் பயணித்து வருகின்றன புத்தகங்கள். வடிவம் மாறி, வகைமை மாறி வழக்கம் மாறி ஏராளமான கால மாற்றங்களுக்கு உள்ளானபோதும், வாசிப்பு என்னும் பழக்கம் மட்டும் தொடர்ந்து தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

இந்நிலையில், உலக மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக புத்தக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1995ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு இன்று வரையிலும் ஏப்ரல் 23ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆங்கிலக் கவிஞர் மற்றும் நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாள் மற்றும் , ஆங்கில மொழி தினமுமான ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது.

இது ஸ்பெயினில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்த “ரோஸ் டே” என்னும் முறையிலிருந்து பிறந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் ரோஜாப்பூக்களைப் பரிமாறிக்கொள்வர். கிட்டத்தட்ட காதலர் தினம் போலத்தான். 1926ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் ஒருவர் இறந்ததையடுத்து அந்த ஆண்டு ரோஜாப்பூக்களுக்குப் பதிலாக புத்தகங்கள் பரிமாறிக்கொள்ளபட்டன.

அன்று புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த நாள் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் தற்போது வரையிலும் ரோஜா கொடுக்கும் மரபு பின்பற்றப்பட்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி