ஆப்நகரம்

மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் உளவுத்துறையினர் தொடர் விசாரணை!

வீட்டுக்காவலில் இருந்து தப்பிய மாலத்தீவு முன்னாள் துணை அதிபர், வியாழக்கிழமை தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இன்று வெளிநாட்டு குடியுறுமை மண்டல பதிவு அதிகாரி மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நேரிடையாக விசாரணை நடத்துகின்றனர்.

Samayam Tamil 2 Aug 2019, 5:13 pm
தூத்துக்குடிக்கு ஆவணங்களின்றி தப்பி வந்துள்ள மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப்-யிடம் உளவுத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் உளவுத்துறையினர் தொடர் விசாரணை!
மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் உளவுத்துறையினர் தொடர் விசாரணை!


தூத்துக்குடியில் இருந்து கடந்த மாதம் 11-ஆம் தேதி மாலத்தீவுக்கு விர்கோ 9 என்ற சிறிய வகை சரக்கு கப்பல் கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்தக் கப்பலில் இந்தோனேசியாவை சேர்ந்த 8 ஊழியர்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் சென்றனர்.

மாலி துறைமுகத்துக்குச் சென்று சரக்கை இறக்கிய கப்பல் பிறகு, அங்கிருந்து கடந்த 27-ஆம் தேதி தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது. சிறிது தொலைவு சென்றதும் நடுக்கடலில் வைத்து ஒருவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கப்பலில் ஏறியுள்ளார்.

கப்பலில் 9 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒருவர் ஏறியதால், தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர், கப்பலின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் தனது கப்பலுக்கு சரக்கு ஏற்றி அனுப்பும், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்தார்.

ரூட் தல பிரச்சனையில் பரபரப்பு; சிசிடிவி எப்படியெல்லாம் உதவுவது பாருங்க- மாணவர் எஸ்கேப்!

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தூத்துக்குடி கடலோரக் காவல்படையினருக்கு தெரிவித்தனர். இந்நிலையில், தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த விர்கோ 9 சரக்கு கப்பலை வியாழக்கிழமை வழிமறித்த, கடலோரக் காவல்படை அதிகாரிகள், கப்பலுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது 9 பேருக்குப் பதிலாக 10 பேர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்தக் கப்பலை சிறைபிடித்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், ரா உளவுப் பிரிவு அதிகாரிகள், கடலோரக் காவல்படை அதிகாரிகள், மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கப்பலில் ஆவணங்களின்றி ஏறியவர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு வரை விசாரணை தொடர்ந்தது. வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கும் உத்தரவுக்குப் பிறகே அகமது அதீப் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை முழுமையாகத் தெரியவரும் என உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டிலேயே கெத்து காட்டி ”டாப் ஸ்டார்” ஆன தமிழ்நாடு - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

மேலும், அவர் மீண்டும் கப்பலில் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில், இன்று சென்னையிலிருந்து வெளிநாட்டு குடியுறுமை மண்டல பதிவு அதிகாரி சேவியர் தனராஜ் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்து அவரிடம் நேரிடையாக விசாரணை நடத்துகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே அவர் எதற்காக தூத்துக்குடி வந்தார் என்ற விவரம் தெரியவரும்.

தூத்துக்குடியில் பிடிபட்ட அகமது ஆதீப், கடந்த 2015-ஆம் ஆண்டு மாலத்தீவு துணை அதிபராக இருந்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூமை விரைவுப்படகில் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக, துணை அதிபராக இருந்த அகமது ஆதீப் கைது செய்யப்பட்டார்.

அட்டாக் பாண்டி மனைவிக்கு இப்படியொரு பிரச்சனை- உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

இதைத் தொடர்ந்து, துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அகமது அதீப்புக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அவரது தண்டனைக் காலம் 18 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாலத்தீவு உயர்நீதிமன்றத்தில் அகமது அதீப் மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த மே மாதம் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், வீட்டுக் காவலில் இருந்த அவர் திடீரென சரக்கு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே அவர் எதற்காக தூத்துக்குடி வந்தார் என்ற விவரம் தெரியவரும்.

அடுத்த செய்தி