ஆப்நகரம்

2020 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2020ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2020, 3:15 pm

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Image tweeted by @NobelPrize


அந்த வகையில் இந்த ஆண்டுக்கு இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு வெற்றி பெற்றவர்கள் யார் என்பது கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வந்தது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்திற்கு (World Food Programme - WFP) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசியை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்கள் நிறைந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட பங்களித்ததற்காகவும், பசியை ஆயுதமாக பயன்படுத்தி போர்களையும், மோதல்களையும் உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தடுக்க முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காகவும் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.



88 நாடுகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்க உலக உணவுத் திட்டம் பெரிதும் உதவியுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் உலகம் முழுக்க பசியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் நோபல் குழு தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து உலக உணவுத் திட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நோபல் பரிசு வழங்கி கவுரவித்ததற்கு நோபல் குழுவுக்கு மனமார்ந்த நன்றி. அமைதியும், பசி ஒழிப்பும் ஒருங்கிணைந்தது என்பதையே இது உலகிற்கு காட்டுகிறது.

இந்த நோபல் பரிசு, உலகம் முழுக்க பசியால் வாடும் 10 கோடிக்கும் மேலான குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கு உணவும், ஆதரவும் அளிக்க உயிரை கொடுத்து உழைக்கும் உலக உணவுத் திட்ட ஊழியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி