ஆப்நகரம்

நம்மிடையே இப்படியொரு ஆச்சரிய ஒற்றுமை- பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு!

பூடான் நாட்டின் ராயல் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

Samayam Tamil 18 Aug 2019, 2:59 pm
பூடான், சீனா இடையிலான டோக்லாம் பகுதி மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு பூடானிற்கு அவசியம். இதையொட்டியே இந்தியாவுடன் நட்பு பாராட்டும் நாடாக, எப்போதும் பூடான் இருந்து வருகிறது. இது மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக பூடான் சென்றுள்ளார்.
Samayam Tamil PM Modi


அந்நாட்டின் பாரோ சர்வதேச விமான நிலையத்தில் மோடிக்கு, பிரதமர் லோடே ஷெரிங் நேற்று சிறப்பான வரவேற்பு அளித்தார். முதல் நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த சூழலில் இரண்டாம் நாளான இன்று, திம்புவில் உள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Also Read: காஷ்மீர் விஷயத்தில் சீனா எதிர்ப்புக்கு இடையே பூடான் பயணத்தில் பிரதமர் மோடி!!

அப்போது பேசிய அவர், பூடானிற்கு வருகை தரும் எந்தவொரு நபரும், அதன் இயற்கை அழகால் ஆச்சரியத்தில் உறைந்து போவர். இந்த மக்களின் கனிவான உபசரிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைக் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்துவிடுவர். இயற்கையாகவே இந்தியா, பூடான் இடையே சிறப்பான பிணைப்பு இருக்கிறது. புவியியல் ரீதியாக மட்டுமின்றி, வரலாறு, கலாச்சாரம், ஆன்மீக ரீதியிலும் இருநாடுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது.

இது இருநாட்டு மக்களையும் நெருக்கமாக ஒன்றிணைக்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டு திட்டமான ’ஆயுஷ்மான் பாரத்’தின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது. இதன்மூலம் 500 மில்லியன் இந்தியர்கள் பயன்பெறுகின்றனர். மேலும் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் தகவல் தொடர்பு வசதியை இந்தியா அளிக்கிறது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கிறது.

Also Read: பேசிக் கொண்டே இம்ரான் கானுக்கு ஆப்பு அடித்த டிரம்ப்...!!

நான் எழுதிய “எக்சாம் வாரியர்ஸ்” என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கருத்துகள் புத்தரின் போதனைகளில் இருந்து ஊக்கம் பெறப்பட்டவை. குறிப்பாக நேர்மறையான எண்ணம் வளர்த்தல், பயத்திலிருந்து விடுபடுவது, நிகழ்கால தருணத்தில் வாழ்வது உள்ளிட்டவை முக்கியமானவை. நல்லிணக்கம், ஒற்றுமை, இரக்கம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற நாடாக பூடான் திகழ்கிறது.

இத்தகைய பண்புகளை நேற்று வீதிகளில் வரிசையாக நின்று என்னை வரவேற்ற குழந்தைகளிடம் கண்டேன். அவர்களின் புன்னகையை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன். பூடானின் இளம் விஞ்ஞானிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டிற்கென சொந்த செயற்கைக்கோளை வடிவமைத்து, விண்ணில் ஏவ முயற்சிக்க வேண்டும். அத்தகைய தருணத்திற்காக காத்திருக்கிறேன்.

Also Read: காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த அண்ணன்... பாகிஸ்தானுக்கு அட்வைஸ்!!

அந்த நாள் விரைவில் வரும். உங்களில் பல பேர் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், புதுமையை புகுத்தக் கூடியவர்களாக வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து திம்புவில் உள்ள நேஷனல் மெமோரியல் சோர்டெனிற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பின்னர் பூடான் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பேமா கியாம்ட்ஷோவை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து தனது பூடான் பயணத்தை முடித்துக் கொண்டு, பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

அடுத்த செய்தி