ஆப்நகரம்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

Samayam Tamil 9 Jun 2020, 6:34 pm
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது. எனினும், தடுப்பு மருந்து கண்டுபிடித்து சந்தைக்கு வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது. அதேசமயம், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு கல்வித்துறை செயலாளர் லியோனர் ப்ரையோன்ஸ், வருகிற ஆக்ஸ்ட் மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றார். ஆனால், இணையதள வசதி இல்லாத ஊரக பகுதிகள், ஏழை குழந்தைகளுக்கு அந்த வசதி கிடைப்பதில் சிரமம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பொது முடக்கம் தற்போது கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், அந்நாட்டில், நாள்தோறும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை மட்டும் 579 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 22,474 ஆக உயர்ந்துள்ளது. 1,011 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடங்காத கொரோனா... வரலாற்றில் முதல்முறையாக ஐநா பொதுக்குழு கூட்டம் ரத்து!

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,119,454 ஆக உயர்ந்துள்ளது. 406,540 உயிரிழப்புகள் சர்வதேச அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி