ஆப்நகரம்

புனித நகரான மெக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்; நடுவானில் தடுத்து சுட்டு வீழ்த்திய சவுதி!

மெக்கா நோக்கி வந்த ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 May 2019, 7:41 am
வளைகுடா நாடுகளில் ஒன்றாக திகழும் ஏமனில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளுக்கு இடையே சண்டை நடைபெற்று கொண்டிருக்கிறது.
Samayam Tamil Mecca


ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிலும் தங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் சவுதி அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்துள்ள ஏமன் தலைநகர் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.

இது கிளர்ச்சியாளர்கள் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. உடனே சவுதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மெக்கா மீது 2 ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனை சரியாக நேரத்தில் கவனித்த சவுதி ராணுவம், நடுவானில் இடைமறித்து அழித்தது.

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் ரமலாம் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழலில் மெக்கா நோக்கி ஏவுகணை வீசப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஈரான் ராணுவம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி