ஆப்நகரம்

இஸ்லாமியர்களை குறி வைக்கும் இலங்கை ராணுவம்!

இலங்கையில் இஸ்லாமியர் சமூகம் அதிகம் வாழும் பகுதியில் ராணுவத்தினர் அத்துமீறி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, அந்த பகுதிக்குள் நிருபர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Samayam Tamil 28 Sep 2019, 12:57 pm
இலங்கையில், சமீபத்தில் ஈஸ்டர் பண்டிகையின்போது கிறஸ்தவ தேவாலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளால் குண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிக்கி, பல நூறு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
Samayam Tamil WhatsApp Image 2019-09-28 at 11.40.31 AM.


இந்த தாக்குதல் இலங்கையின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக இஸ்லாமியச் சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் ராணுவம் சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் பதுங்கி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் கேரளா, தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடத்தினர். சோதனையின்போது பல இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கையில் நேற்று இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதியில் ராணுவம் தீவிர சோதனை நடத்தியுள்ளது.

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்கு இலங்கை ராணுவத்தினரும், காவல்துறையினரும், இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை வேட்டை, கல்முனை, மையவாடி உள்ளிட்ட பகுதிகளில் வெடிக்குண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினர்.

எனினும், இந்த சோதனையின்போது ஆயுதங்களோ, தடைசெய்யப்பட்ட எந்தவித பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனை நடைபெற்றபோது, அந்த பகுதிக்குள் செல்ல முயன்ற நிருபர்கள் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த நாட்களில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர், அத்துமீறி சோதனை செய்து வந்த நிலையில், இப்போது இஸ்லாமியர்களைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டனர் என அந்நாட்டில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி