ஆப்நகரம்

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல்!

இலங்கை பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2020, 6:51 pm
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதன்பின்னர் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தலை தள்ளிவைத்தது. இலங்கையில் கொரோனாவால் சுமார் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil இலங்கை தேர்தல் 2020


தற்போது இலங்கையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும், இரவு நேரத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இம்மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சோதிப்பதற்காக இந்த வாரம் ஒத்திகை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் மகிந்தா தேஷப்ரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை அரசிதழில், “புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி