ஆப்நகரம்

ஆப்கனின் வடக்குப் பகுதியை கைப்பற்றிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

TNN 15 Aug 2016, 5:03 pm
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil taliban capture key district in afghanistan north
ஆப்கனின் வடக்குப் பகுதியை கைப்பற்றிய தலிபான்கள்!


ஆப்கனில் மதவாத ஆட்சி நடத்திவந்த தலிபான்கள், கடந்த 2001ம் ஆண்டில், அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர் விரட்டியடிக்கப்பட்டனர். அமெரிக்காவின் நேரடி மேற்பார்வையில், ஜனநாயக ரீதியான ஆட்சி நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதோடு, தற்போதுவரை ஆப்கானிஸ்தானில் நேட்டோ பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு, தலிபான்கள் மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதை உறுதி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கே பக்லான் மாகாணத்திற்கு உள்பட்ட தஹான் இ கோரி என்ற மாவட்டத்தை, தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆப்கன் அரசு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக, தலிபான்களுக்கும், நேட்டோ பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்துள்ளது.

இதில், தலிபான்கள் வெற்றிபெற்று, தஹான் இ கோரி மாவட்ட நிர்வாகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும், ஆப்கன் மற்றும் நேட்டோ படையை சேர்ந்த 30க்கும் அதிகமான வீரர்களை சிறைப்பிடித்து, கொன்றுவிட்டதாகவும் தலிபான் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் அமைப்பினர் செல்வாக்குப் பெற தொடங்கியுள்ளதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் முகாமிட்டுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ பாதுகாப்புப் படையினர் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், தலிபான்களின் இந்த தாக்குதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்த செய்தி