ஆப்நகரம்

மோடி 'இந்தியாவின் பிரிவினைவாதத் தலைவர்': 'டைம்' இதழில் விமர்சனம்

டைம் (TIME) இதழின் அட்டைப்பட கட்டுரையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய, ‘இந்தியாவின் பிரிவினைவாதத் தலைவர்’ என்ற கட்டுரை பிரசுரமாகியுள்ளது. இதழின் அட்டைப்படமாக காவி துண்டு அணிந்த மோடியின் படமே உள்ளது.

Samayam Tamil 10 May 2019, 2:50 pm
பிரபல டைம் இதழல் அட்டையில் நரேந்திர மோடியின் படத்தைப் போட்டு, 'இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்' என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது
Samayam Tamil PM-Narendra-Modi-speaks


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் (TIME) இதழின் மே 20ம் தேதி வரைக்குமான பதிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதில், அட்டைப்பட கட்டுரையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய, ‘இந்தியாவின் பிரிவினைவாதத் தலைவர்’ என்ற கட்டுரை பிரசுரமாகியுள்ளது. இதழின் அட்டைப்படமாக காவி துண்டு அணிந்த மோடியின் படமே உள்ளது.

ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள அட்டைப்படக் கட்டுரை, மோடி ஆட்சியில் ஜனநாயக நாடான இந்தியா மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக விமர்சிக்கிறது. இந்தியாவின் மதச் சார்பின்மை, பத்திரிகைச் சுதந்திரம் ஆகியவை சிதைக்கப்பட்டுள்ளது எனவும் குஜராத் கலவரத்தையும், பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் இந்தக் கட்டுரை கண்டிக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு மோடி ஆட்சியைத் தாங்குமா? என்று கட்டுரையாளர் ஆதிஷ் கேள்வி எழுப்புகிறார். இந்தியா மட்டுமின்றி துருக்கி, பிரேசில், பிரிட்டன், அமெரிக்கா போன்ற குடியரசு நாடுகளிலும் ‘பெரும்பான்மைவாதம்’ வேகமாக வளர்வதைக் சுட்டிக்காட்டியுள்ளார். “குடியரசு நாடுகள் பெரும்பான்மைவாதத்தின் முன் வீழத்தான் போகின்றன. அவற்றில் இந்தியா முதலாவதாக இருக்கப்போகிறது.” எனவும் கட்டுரையாளர் எழுதியுள்ளார்.


மோடிக்கு சாதகமாக உள்ள அம்சங்களையும் அலசியுள்ள இந்தக் கட்டுரையில், “மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியைக் கொண்டிருப்பதற்காக மோடி மிகவும் அதிர்ஷ்டக்காரர்- காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணையாத கட்சிகளின் கூட்டணிக்கு அவரை வீழ்த்த வேண்டும் என்பதைத் தவிர எந்த கொள்கையும் இல்லை.” எனவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ள டைம் இதழ் 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம் கொடுத்தது. 2015ல் ‘மோடி ஏன் முக்கியமானவர்?’ என்ற தலைப்புடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்கிற நேரத்தில், ‘மோடி வெறும் தோல்வி அடைந்த அரசியல்வாதியாக, மற்றொரு வாய்ப்பு கேட்டு தேர்தலைச் சந்திக்கிறார்’ எனக் கடுமையாக விமர்சிக்கும் கட்டுரையை இதழின் முதன்மை கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.

அடுத்த செய்தி