ஆப்நகரம்

ஜப்பானை புரட்டி போடும் ஹகிபிஸ் புயல்; 11 பேர் பலி

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கத்தால் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர்.

Samayam Tamil 13 Oct 2019, 1:34 pm
டோக்கியோ: ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil hagibis


வெளுத்து வாங்கிய கனமழை; இனியும் புரட்டி எடுக்கப் போகுது- வானிலை மையம் எச்சரிக்கை!

ஜப்பானின் கிழக்கு கடற்கரையை நோக்கி 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு, பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துள்ளது. அத்துடன் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.


கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 50,000 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


ஒரே இரவில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்த 1417 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் முழுமையாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. கனமழை, புயல் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போன்ற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கடந்த 1958ஆம் ஆண்டு 1000க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கிய இடா புயலைப் போன்று இந்த ஹகிபிஸ் புயலானது சக்தி வாய்ந்ததாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு வலுவிழக்கும் போது மழை அளவு அதிகரிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி