ஆப்நகரம்

காந்தி சிலை சேதம்... இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்கா!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கோருவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Jun 2020, 6:09 pm
அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞரை போலீஸ் காவலில் வைத்து வெள்ளை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் கழுத்தை நெரித்து கொன்றார். ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தின் விளைவாக அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்து வன்முறைக்களமாக மாறியுள்ளது. இந்த போராட்டங்களுக்கு ஐரோப்பா உள்ளிட்ட இதர பகுதிகளிலும் ஆதரவு குவிந்துள்ளது.
Samayam Tamil வாஷிங்டன் காந்தி சிலை


இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் 25 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை அடக்க தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் போராட்டங்கள் தணியவில்லை. வெள்ளை மாளிகை வரை போராட்டக்காரர்கள் படையெடுத்துவிட்டனர். அரசு கட்டிடங்களும், போலீஸ் வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே இருக்கும் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களால்தான் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கோருவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “வாஷிங்டனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. எங்களது மன்னிப்பை தயவுகூர்ந்து ஏற்க வேண்டும். ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணமும், வன்முறை போராட்டங்களும் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி