ஆப்நகரம்

மோசமான நிலைமையில் ட்ரம்ப் : வெள்ளை மாளிகை அதிர்ச்சி தகவல்!

அதிகாரிகள் தெரிவித்ததற்கு மாறாக அதிபர் ட்ரம்பின் நிலைமை மோசமடைந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Oct 2020, 6:56 pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அக்டோபர் 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வல்லுநர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Donald Trump


அதிபர் ட்ரம்புக்கு 74 வயதாகிறது. பொதுவாகவே, கொரோனா வயது முதிர்ந்தவர்களை கடுமையாக தாக்கி வருகிறது. ஆனால், ட்ரம்பின் உடல்நிலையில் பிரச்சினையில்லை எனவும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

நேற்று அவருக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் நேரடியாக வெளியிட்டிருந்த வீடியோவில், தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்பிவிட நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்புக்கு மாயாஜால மருந்து கொடுக்கப்பட்டதா?

இந்த நிலையில், அதிகாரிகள் தெரிவித்ததற்கு மாறாக ட்ரம்பின் உடல்நிலை மோசமடைந்ததாக வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை ஊழியர் தலைவர் மார்க் மிடோஸ் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ட்ரம்புக்கு காய்ச்சல் வந்து ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கணிசமாக குறைந்தபிறகே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

மார்க் மிடோஸ் பேசியபோது, “தற்போது மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் அவருக்கு காய்ச்சல் இல்லை. மேலும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு நன்றாக இருக்கிறது. நேற்று அவரது நிலை மோசமாக இருந்தது வருத்தமளித்தது.

நேற்று அதிபருக்கு காய்ச்சல் இருந்தது. மேலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. ஆனாலும் அவர் தனது பாணியில் வலம் வந்துகொண்டு இருந்தார். நேற்று காலை நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ட்ரம்ப் உடல்நிலையில் நம்பமுடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி