ஆப்நகரம்

கரூர் சேவல் சண்டை: பரிசீலிக்க ஆட்சியருக்கு உத்தரவு!

கரூர் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி குறித்து பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 2 Feb 2023, 12:35 pm
கரூர், அரவக்குறிச்சி, பூலாம்வலசு கிராமத்தில் 08.02.2023 முதல் 11.02.2023 வரை 4 நாட்களுக்கு சேவல் சண்டை போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னதாக பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil கரூர் சேவல் சண்டை
கரூர் சேவல் சண்டை


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவில் உள்ள பூலாம்வலசு கிராமத்தில் அருள்மிகு மகாமாரியம்மன், அருள்மிகு பகவதி அம்மன் மற்றும் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. பாரம்பரியமும், தொன்மையும் வாய்ந்த இக்கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது வழக்கம்.

அதேபோல் திருவிழாவில் சேவல் சண்டை நடத்துவதும் வழக்கமாக உள்ளது. அதன் அடிப்படையில் 08.02.2023 முதல் 11.02.2023 வரை 4 நாட்களுக்கு சேவல் சண்டை போட்டி நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம்.

மேலும் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ, போட்டியில் பங்கேற்கும் சேவல்கள் மீது எந்தவிதமான துன்புறுத்தலோ, வன்முறையோ ஏற்படாத வகையில் முழு கிராமத்தின் சார்பாக, நாங்கள் பல ஆண்டுகளாக சேவல் சண்டை போட்டியை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம்.


சேவல் சண்டை போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதற்கான எந்தவித பதிலும் இல்லை. எனவே, கரூர், அரவக்குறிச்சி, பூலாம்வலசு கிராமத்தில் 08.02.2023 முதல் 11.02.2023 வரை 4 நாட்களுக்கு சேவல் சண்டை போட்டி நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூர் கலெக்டர் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னதாக பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி