ஆப்நகரம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காத்திருந்த ஷாக் - கரூரில் நடந்தது என்ன?

கரூரில் பள்ளி சீருடையில் மதுபோதையில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த அரசு பள்ளி மாணவிகளை மீட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மதுவிலக்கு துறையின் அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Aug 2022, 8:37 am
கரூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த 3 மாணவிகள் கடந்த ஏப்ரலில் நடந்த பொது தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நடைபெற்றது. இதற்காக 3 மாணவிகளும் பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்துள்ளனர்.
Samayam Tamil Minister Senthil Balaji
கோப்புப்படம்


அதில், ஒரு மாணவியின் ஆண் நண்பர் அவர்களுக்கு மது(wine) வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவற்றை குடித்த மாணவிகளில் ஒருவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட மற்ற 2 மாணவிகள் பசுபதிபாளையம் பகுதியில் பேருந்தில் ஏறி சர்ச் கார்னர் வந்துள்ளனர். அங்கு வாந்தி எடுத்ததோடு பாதி மயக்க நிலையில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு எண் 100-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், அங்கு வந்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதோடு அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் பெற்றோரை வரவழைத்து இருவருக்கும் அறிவுரை கூறி பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இன்று கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்பள்ளியில் 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் எந்த இடத்திலும் போதைப்பொருட்கள் நடமாட்டம் இல்லாத அளவிற்கு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரிய நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் இயக்கமாக முதல்வர் முன்னெடுத்துள்ளார். நிச்சயமாக போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றிக்காட்டுவார்” என்றார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தனது சொந்த மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் மது குடித்துவிட்டு சாலையில் பாதி மயங்கிய நிலையில் இருந்தது அதிர்ச்சியாக உள்ளதாக, இந்த தகவலை அறிந்த பின்னர் அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை செல்போனில் அழைத்த போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அடுத்த செய்தி