ஆப்நகரம்

ஓசூர் மாநகராட்சி 'மாஸ்டர் பிளான்' - நடப்பது என்ன?

120 கிராம ஊராட்சிகள், கெலமங்கலம் பேரூராட்சி ஆகியவற்றை இணைத்து ஓசூர் மாநகராட்சி 740 சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

Samayam Tamil 11 Apr 2022, 7:29 pm
ஓசூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் மாஸ்டா் பிளான் குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. இதில், நகா்ப்புற உள்ளாட்சித்துறை இயக்குனர் சரவணவேல் ராஜ், ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
Samayam Tamil Hosur Corporation


ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதன்மை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா கூறியதாவது:-

"தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2 நாட்களுக்கு முன்பு நகா்ப்புற உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது திருப்பூர், கோவை, ஓசூர் மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகள் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு சட்ட தகுதி வழங்கி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நகா்ப்புற வளா்ச்சிக் குழும அலுவலகம் ஓசூரில் விரைவில் கட்டப்படும். ஓசூா் மாநகராட்சி 740 சதுர கிலோ மீட்டா் தொலைவுக்கு பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும்.

ஓசூா் மாநகராட்சியுடன் 120 ஊராட்சிகள் மற்றும் கெலமங்கலம் பேரூராட்சி ஆகியவை இணைக்கப்படும். இது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து தமிழ்நாடு அரசிடம் சமா்ப்பிக்கப்படும். அதுவரை ஓசூா் புதுநகர வளா்ச்சிக் குழுமத்தில் மனை அப்ரூவல் தடையின்றி வழங்கப்படும். விவசாய நிலங்கள் கையகப்படுத்த மாட்டோம். தற்போது அதிக எண்ணிக்கையில் தனியாா் நிறுவனங்களே வீடுகளைக் கட்டிக் கொடுப்பதால் இனி வீட்டுவசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்தாது. இருப்பில் உள்ள காலி இடங்களில் மட்டுமே வீடுகளைக் கட்டி கொடுக்கும்" இவ்வாறு கூறினார்.
திருட்டு மின்சாரம்; காலி நாற்காலி… களையிழந்த திமுக பொதுக்கூட்டம்!

அதனைத் தொடர்ந்து ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்தியா பேசியதாவது: -

"தற்போது பெங்களூரு நகரம் அழகாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மாஸ்டா் பிளான் தான். ஓசூா் நகரமும் அழகான நகரமாக அமைய வேண்டும் என்றால் மாஸ்டா் பிளான் சிறப்பாக இருக்க வேண்டும். ஓசூரில் தொழிற்சாலைகள் மட்டும் அல்லாமல் மலா் உற்பத்தி, பட்டு உற்பத்தியும் உள்ளன.


கனிம வளங்களும் அதிக அளவில் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகள் நிறைந்த பகுதி. குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ள பகுதி. ஆனால், அந்த மலைகள் வெட்டப்பட்டு கா்நாடகத்துக்கு கடத்திச் செல்லப்படுகிறது. கா்நாடக மாநிலத்துக்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதை காவல் துறையினா் தடுத்த நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

அடுத்த செய்தி