ஆப்நகரம்

இங்கிலீஷ் டீச்சரை கன்னத்தில் அறைந்த பிளஸ் 1 மாணவர்… ஓசூரில் நடந்தது என்ன?

அரசு பள்ளி ஆசிரியரை பிளஸ் 1 மாணவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 1:54 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil Krishnagiri teacher slapped by student


இந்த பள்ளியில் கடந்த 1-ந்தேதி, ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியை இந்திரா(42) என்பவர் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை அவர் கண்டித்ததால் அந்த மாணவருக்கும், ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த அந்த மாணவர், ஆசிரியை கன்னத்தில் 2 முறை ஓங்கி அறைந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை மாணவன் குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல்… கர்நாடகா - தமிழக எல்லையில் கடும் கட்டுப்பாடு!

ஆசிரியையின் கன்னத்தில் அடித்த மாணவர் மீது இதுவரை கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனிடையே, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அரசு பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஆசிரியையை தாக்கிய மாணவரை உடனடியாக தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும், அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி