ஆப்நகரம்

வரதட்சனை கொலை: மனைவியை தீவைத்து கொளுத்திய குடிகார கணவர்!

ஊரடங்கு காலத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆண் ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்த பெற்றோர், தங்கள் மகளை இழந்துவிட்டனர்...

Samayam Tamil 24 Sep 2020, 4:17 pm
மதுரையில் கொரோனா காலத்தில் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்காமல், அவசர கதியில் திருமணம் செய்து கொடுத்ததன் விளைவாகப் பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து 4 மாதத்தில் மனைவி வீட்டாரிடம் வரதட்சணையாகப் பெற்ற நகை, பணத்தைக் குடித்துத் தீர்த்த நிலையில், மேலும் பணம் கேட்டு சித்திரவதை செய்து மண்ணெணய் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.
Samayam Tamil வரதட்சனை கொலை: மனைவியை தீவைத்து கொளுத்திய குடிகார கணவர்!
வரதட்சனை கொலை: மனைவியை தீவைத்து கொளுத்திய குடிகார கணவர்!


மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிசுரேஷ். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் கருப்பாயூரணி அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகள் கற்பகவல்லி என்பவருக்கும் பெண்ணுக்குக் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின்பு கூட்டுக் குடும்பமாக இந்த தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் மதிச்சியம் பகுதியில் ஹரிசுரேஷ்-கற்பகவல்லி தம்பதியினர் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் ஹரிசுரேஷ், வீட்டிலிருந்தபடியே பொழுதைக் கழித்து வந்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ஹரிசுரேஷ் கிடைக்கின்ற பணத்தில் தினமும் மது அருந்தி விட்டு மனைவி கற்பகவல்லியிடம் தகராறு செய்து அடித்துத் துன்புறுத்திய வந்திருக்கிறார். ஏற்கனவே திருமணத்தின் போது வரதட்சணை பெற்ற பணத்தை அனைத்தையும் செலவு செய்துவிட்டு, தங்க நகைகளை அடகு வைத்துவிட்ட அந்த பணத்தையும் வைத்து மது அருந்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என ஹரிசுரேஷ், கற்பகவல்லியை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹரிசுரேஷ் புதன்கிழமையும் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஹரிசுரேஷ் தனது மனைவி கற்பகவல்லியை அடித்து உதைத்துள்ளார்.

தொடர்ந்து ஹரிசுரேஷ், வீட்டிலிருந்த மண்ணெண்ணெண்யை கற்பகவல்லி மீது ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார். தீ உடல் முழுவதும் மளமளவெனப் பற்றி எறிய அலறியடித்து வீட்டை விட்டு ஓடிவந்த கற்பகவல்லியை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் ஹரி சுரேஷை மதிச்சியம் காவல்நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஹரிசுரேஷ் மீது பல்வேறு கொள்ளை வழக்குள் காவல் நிலையத்தில் நிலுவையிலிருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கற்பகவல்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா காலத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளையைப் பற்றிச் சரியாக விசாரிக்காமல் அவசர அவசரமாகத் திருமணத்தை முடித்ததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி