ஆப்நகரம்

2026-ல் பாமக ஆட்சி; துரைமுருகனுக்கு நன்றி சொன்ன அன்புமணி!

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை அமல்படுத்தட்டும் என்று கூறி அமைச்சர் துரைமுருகனுக்கு, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூலாக பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 3 May 2022, 8:29 am
மயிலாடுதுறை மாவட்டம் பேச்சாவடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
Samayam Tamil Anbumani
அன்புமணி ராமதாஸ்


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பள்ளி வாசலிலேயே எளிதாக கிடைப்பதாகவும், இதற்கு காவல்துறையும் உடந்தையாகச் இருப்பதாகவும் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், தமிழக முதல்வர் இதற்கென தனி கவனம் செலுத்தி அனைத்துக்கட்சி கூட்டத்தினை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மருத்துவ கல்வி வணிக மையமாவதை தடுக்கும் நோக்கில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகும், நீட் பயிற்சி சென்டர்கள் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மாணவர்களிடமிருந்து கொள்ளை அடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மட்டும் நடத்தி மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த கல்வி ஆண்டிற்குள் 10.5 % சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பது தங்களது கோரிக்கையாக இருப்பதாகவும், நெய்வேலி என்எல்சியில் கடந்த வருட லாபம் மட்டும் 11,000 கோடி என்றும் ஆனால் சுற்றியுள்ள பொது மக்களுக்கு மருத்துவ வசதி உட்பட அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் கடலூர் மாவட்டத்திற்கு என்எல்சி நிறுவனம் எதற்கு இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் 100 விழுக்காடு பூரண மதுவிலக்கு அறிவிக்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றட்டும் என கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வாக்கு பழித்து பாமக நிச்சயம் ஆட்சி அமைக்கும், அப்போது பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அடுத்த செய்தி