ஆப்நகரம்

உண்மை விசுவாசியே! தலைமையேற்க வா... ஓபிஎஸ் ஸை அழைக்கும் போஸ்டர்கள்

அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட உண்மை விசுவாசியே! ஆட்சிக்கும் கட்சிக்கும் தலைமேற்க வா... தலைவா வா” என்று வாசகம் இடம்பெற்றிருந்தது.

Samayam Tamil 6 Oct 2020, 11:55 pm
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் யார் வெற்றி பெறப்போவது என்ற கேள்வியை விட, தற்போதைய ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளாராகப் போவது என்ற கேள்விதான் தற்போது பரபரபப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முதல்வர் வேட்பாளர் விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கூட்டத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது வரும் அக்டோபர் 7ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதுவரையிலும் கூட பொறுமை காக்க மாட்டோம் என்கிறார்கள் கழகக் கண்மணிகள். மாறி மாறி கருத்து சொல்லி அமைதியக் குலைக்கும் அமைச்சர்கள் ஒருபுறம் என்றால், தேடித் தேடி வாசகங்களைப் பிடித்து போஸ்டர் ஒட்டும் ஊரக அரசியல் தொண்டர்கள் மறுபுறம் என அதிமுகவில் இரு அணிகள் இருப்பதை உறுதி செய்து கொண்டு வருகின்றனர்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி: திட்டமிட்டபடி நாளை அறிவிப்பு!

இந்நிலையில், நாளை முதல்வர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இராமநாதபுரம் நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குறிப்பாக, அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட உண்மை விசுவாசியே! ஆட்சிக்கும் கட்சிக்கும் தலைமையேற்க வா... தலைவா வா” என்று வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த சுவரொட்டியை ஒட்டும்போதே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் இராமநாதபுரம் மாவட்ட ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர். அத்துடன், “இப்படிக்கு கழக உண்மை தொண்டர்கள்” என்றும் அச்சடித்துள்ளது கவனிக்கத்தக்கது

அடுத்த செய்தி