ஆப்நகரம்

இலங்கை சிறையில் உள்ள கைதிகளுக்கு முக்கிய சோதனை: அரசு அதிரடி!

இலங்கை சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

Samayam Tamil 4 Dec 2020, 9:24 pm
இலங்கையில் பெரும்பாலான சிறைகளில் அளவை விட இருமடங்கிலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால், கைதிகள் மட்டுமல்லாமல் சிறைக்காவலர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இலங்கை சிறையில் மட்டும் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைகளிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் கொழும்பு அருகே மஹர சிறைச்சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கைதிகள் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு காவலர்கள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட 5 பேர் அடங்கிய குழுவின் இடைக்கால அறிக்கை வருகிற 7ஆம் தேதி நீதி அமைச்சரிடம் தாக்கல் சமர்பிக்கப்படவுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சில கைதிகளிடமும் அவர்கள் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

புரேவி புயல்: இலங்கையின் தற்போதைய நிலை என்ன?

மஹர சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் 2800 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள நிலையில், இந்த வார இறுதியில் இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டும் தற்போது வரை 1382 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி