ஆப்நகரம்

இலங்கையில் இனி நோ கரண்ட்; இருளில் தத்தளிக்க போகும் மக்கள்.!

இலங்கையில் இனி தொடர்ச்சியாக மின் விநியோகம் வழங்கப்பட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Feb 2023, 6:45 pm
இலங்கையில் கடந்தாண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதாரா நெருக்கடியால் பணவீக்கம், வேலையிழப்பு, அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்தது. வாழவே வழியில்லாத நிலையில் இலங்கை மக்கள் வீதியில் இறங்கி போராடினர்.
Samayam Tamil no power supply
இலங்கையில் இனி தொடர் மின் விநியோகம் கிடையாது


அதைத் தொடர்ந்து இலங்கை நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் இத்தகைய நிலைக்கு ஆட்சியில் இருந்த ராஜபக்‌ஷே சகோதரர்கள் தான் காரணம் என கருதிய மக்கள் அவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு எரித்தனர். அதனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அப்போதைய அதிபராக இருந்த கோத்தபய ராஜபகஷே தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார். நெருக்கடியை சந்தித்த இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும் உணவுப் பொருட்கள், எரிபொருள், அத்தியாவசிய மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்தன. இலங்கையில் வாழும் சூழல் இல்லாததால் பல மக்கள் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்தனர்.

அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்ற பின்னும் இலங்கையில் இன்னும் பொருளாதாரம் மீளவில்லை. அதேபோல் அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு, வரி சுமை, உர பிரச்னை, நாளாந்த மின்சார வெட்டு, வேலையின்மை பிரச்னை, கடன் வட்டி வீதம் அதிகரித்தல், மனித உரிமை மீறல்கள் ஆகிய பிரச்னைகளினால் இலங்கை மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

உணவு தேவைகளை நிவர்த்தி செய்தல், குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புதல், மாதாந்த கட்டணங்களை செலுத்துதல், கடன் தவணைகளை செலுத்துதல் ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதிலும் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ராணுவத்தை மூன்றில் ஒரு பங்கு குறைக்க இலங்கை அரசு முடிவு செய்தது. இந்தநிலையில் இலங்கையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் -வைகோ சந்திப்பு... பேசியது என்ன?

மேலும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி