ஆப்நகரம்

ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை: இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும் டிசம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 3 Dec 2018, 6:27 pm
மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil raju


இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்ததில் இருந்து இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இதை ஏற்க மறுத்த ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியிலிருந்து விலகாமல் நாடாளுமன்றத்தை கூடி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஜனவரி 5ம் தேதி பொதுதேர்தல் நடத்தப்படும் என உத்தரவிட்டார்.

அதிபரின் இந்த முடிவை எதித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைக்க இடைக்கால தடை விதித்தவுடன், தேர்தல் நடத்தவும் தடை விதித்து தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டு, ராஜபக்சே அரசுக்கு எதிராக மூன்றுமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வெற்றி பெற்றது.

எனினும், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது, வேறு யாரையாவது ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரை செய்யலாம் என அதிபர் சிறிசேனா கூறி வருகிறார்.

இந்நிலையில் ராஜபக்சே பிரதமராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து 122 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும் டிசம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வரும் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இலங்கை அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி