ஆப்நகரம்

அமைச்சரின் 3 பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி: இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைச்சரின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2018, 7:40 pm
இலங்கை அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் அமைச்சரின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil srilanka shoot


இலங்கையில் ஆட்சியில் இருந்த ஆளும்கட்சியின் கூட்டணியில் இருந்த கட்சியுடன் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக பதவி அமர்த்தினார். திடீரென நடந்த இந்த நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதைத்தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, இது சட்டத்திற்கு விரோதமானது எனவும், நான் தான் இன்னமும் இலங்கையின் பிரதமர் என கூறி வந்தார். இதனிடையே, ரணில் விக்கிரமசிங்கேவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் அளவிலான பாதுகாப்பை விலக்கிக்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார். மேலும், புதிய பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, நாளை அமைச்சரவையை நியமித்து ஆட்சி அமைக்க திட்டமிட்டார்.

இலங்கையின் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே தனது பெருமான்மையை நிரூபிக்கும் வரையில் ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் எனவும், அதுவரையில் ரணில் விக்கிரமசிங்கேவே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் எனவும் கூறியுள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் இலங்கையில் மேலும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், இன்று மாலை இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைச்சரின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரணிலின் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர் அர்ஜூன ரணதுங்க. இவர் இன்று மாலை கொழும்புவில் உள்ள பெட்ரோலிய துறையின் தலைமையகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஆவணம் ஒன்றை அமைச்சர் எடுக்க முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் கரகோஷம் எழுப்பினர். நிலைமை கட்டுக்கடங்காமல் செல்ல, அமைச்சரின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், மூன்று பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அமைச்சர் அர்ஜூனரணதுங்க அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று பாதுகாவலர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இந்த சம்பவத்தால், அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி