ஆப்நகரம்

இலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்!

இலங்கையில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 11,387 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 25 Sep 2019, 8:22 am
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இன்னும் இரு நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அண்டை நாடான இலங்கையிலும் தொடர்ந்து மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Untitled collage (17)


இலங்கையில் பெய்துவரும் மழையால் இதுவரை ஒருவர் பலியாகியதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். மேல் மாகாணத்தில் 31165 பேரும், தென் மாகாணத்தில் 13926 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதோடு, 282 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முகாம்களில் தங்கவைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. சுமார் 16 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 878 குடும்பங்களைச் சேர்ந்த 3488 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்தவர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் பெய்யும் கடும் மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே இப்பகுதிகள் வழியாக விமான நிலையத்திற்கு செல்பவர்கள் 3 மணி நேரத்திற்கு முன்னர் வருவதால் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி