ஆப்நகரம்

50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு சாப்பாடு: மனித நேயர் மதுரை ராமு தாத்தா மறைந்தார்!

மதுரையில் ஏழைகளின் பசியை போக்கி வந்த மனித நேயர் ராமு தாத்தா உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி மதுரையை மட்டுமல்ல அவரை அறிந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Samayam Tamil 12 Jul 2020, 8:17 pm
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகே அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ள பஜார் வீதியில் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர் ராமு தாத்தா (91). ஹோட்டல் மட்டும் சிறிதல்ல இங்கு பரிமாறப்படும் உணவினுடைய விலையும் சிறியதுதான். அம்மா உணவகங்கள் தற்போது மலிவு விலை உணவுக்கு பெயர் போனதாக இருக்கிறது. ஆனால், 1967ஆம் ஆண்டு முதலே மலிவு உணவை வழங்கியவர் ராமு தாத்தா.
Samayam Tamil ராமு தாத்தா
ராமு தாத்தா


இவரது சொந்த ஊர் மதுரை அருகே வில்லூர் கிராமம். வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற ராமு தாத்தா, அதன் பேரில் தனது 17ஆவது வயதில் ஈர்க்கப்பட்டு ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது மனைவியின் கம்மலை விற்று ஹோட்டலை தொடங்கியவர். ஆரம்பத்தில் ஆரம்பத்தில் கால் அணாவுக்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா, அதன்பிறகு ரூ.1.25க்கு காய்கறி கூட்டுகளுடன் சாப்பாடு வழங்க தொடங்கினார். பின்னர், ரூ.2, ரூ.3, ரூ.5 என விலையை உயர்த்தி தற்போது ரூ.10க்கு வழங்கி வந்தார். அதுவும் கடைக்கு சாப்பிட வருபவர்கள் கட்டுபடியாகாது என்று வற்புதியதன் பேரில்தான் இந்த விலையேற்றத்தையே அவர் செய்தார்.

காலையில் 2 வகை சட்டினியுடன் சுட சட இட்லி, தோசை, பொங்கலும், மதியம் 2 பொறியல், ரசம், சாம்பார், அப்பளம், மோருடன் சாப்பாடும் தலா ரூ.10க்கு வழங்கி வந்தார் ராமு தாத்தா. சாப்பாட்டின் விலைதான் குறைவே தவிர தரத்தில் குறைவு இல்லை. பொன்னி அரிசியில்தான் சாப்பாடு போடுவார். சாப்பாடு அவ்வளவு சுவையாக இருக்கும். அதுதவிர ஆதரவற்றவர்களுக்கு இலவசமாகவும் சாப்பாடு வழங்கி மனதால் உயர்ந்த இடத்தை பிடித்தவர் ராமு தாத்தா. இவரது சேவையை பாராட்டி மதுரையில் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது.

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்

மதுரை அரசு மருத்துவனைக்கு வரும் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், அன்றாட கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என்று ஏழை, எளிய மக்களை வாடிக்கையாளர்களாக கொண்டு அவர்களது பசி போக்கி வந்தவர். ஜி.எஸ்.டி.யால் பொருட்களின் விலை ஏற்றமடைந்தாலும், ஏழை, எளிய மக்களை ஏமாற்றாமல் அதே விலையுடன் அவர்களது பசியாற்றி வந்தார். உணவுடன் சேர்த்து அன்பையும் பரிமாறுவார் ராமு தாத்தா. ஹோட்டலில் சாப்பிட வருவோரை இன்முகத்துடன் வரவேற்று சாப்பிட்டு விட்டு செல்வோரிடம் நிறை, குறைகளையும் அனுசரனையாக விசாரிப்பது அவரது தனிச்சிறப்பு.

உழைப்பிற்கு ஒய்வுக்கு கொடுக்க வேண்டிய வயதிலும், தனது மனைவியை 2017ஆம் ஆண்டு பிரிந்த போதிலும், இளைஞர் போல் சுறுசுறுப்பாக தளராத மனதுடன் மக்களுக்கு உணவு அளித்து வந்தார். “உங்க காலம் வரைக்கும் கடைய நல்லா பார்த்துக்கோங்க” என்று அவரது மனைவி வாக்கு வாங்கியதாக நெகிழ்ச்சியுடன் அவரே கூறியிருக்கிறார். அந்த தெம்பும், மதுரையின் வீரமும், ஈரமும் அவரை இவ்வளவு நாட்கள் சுறுசுறுப்பாக இயங்க வைத்துள்ளது.

ராமு தாத்தா


இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே வயோதிகத்தாலும், உடல் நலகுறைவாலும் பாதிக்கப்பட்டிருந்த ராமு தாத்தா இன்று காலமானார். அவரது மறைவு மதுரை மக்களிடையே மட்டுமல்லாமல் அவரை அறிந்த அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



“மதுரை ராமு தாத்தா! உங்கள் உடல் மரிக்கலாம்; நீங்கள் போட்ட உணவு செரிக்கலாம்; ஆனால் உங்கள் நினைவு பசியாறியவர் நெஞ்சில் நீங்காமல் நிலைக்கும்! தன் தொழிலை சேவையாக மாற்றும் அனைவரும் தெய்வங்களே” என்று நடிகர் விவேக் ராமு தாத்தாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல்,“ராமு தாத்தா காலமான செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று அமைச்ச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ராமு தாத்தாவின் மறைவு என்னுடைய பெற்ற தந்தை இறந்ததை போன்று மனது கனக்கிறது. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது” என்று கூறுகிறார் அவரது வாடிக்கையாளரான ஆட்டோ ஓட்டுநர் ராஜா. இது போன்று பல ஆயிரக்கணக்கான சொந்தங்களை சம்பாத்தித்தவர் ராமு தாத்தா. போய் வாருங்கள் ராமு தாத்தா உங்களால் மதுரைக்கு மேலும் ஒரு சிறப்பு. உங்களை எங்கள் மதுரை என்றும் நினைத்துக் கொண்டு இருக்கும்..!

அடுத்த செய்தி