ஆப்நகரம்

நீட் தேர்வுக்கு முடிவு எட்டப்படுமா? மாற்று சேர்க்கை முறை குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு - அரசு உத்தரவு

தமிழகத்தில் நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அரசு உயர்நிலைக்குழுவை அமைத்துள்ளது.

Samayam Tamil 5 Jun 2021, 8:44 pm
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலை குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, '' ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும், கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்டப்போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் பேருந்து சேவைக்கு எப்போது அனுமதி?

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டுற்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது.

இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி