ஆப்நகரம்

சரிந்த வீடு, கர்ப்பிணி மனைவியை காப்பாற்றிவிட்டு, தனது உயிரை விட்ட கணவர்..!

ராமநாதபுரம் அருகே கர்ப்பிணி மனைவியை காப்பாற்றி விட்டு இடிபாடுகளில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Jan 2021, 5:40 pm
தமிழகத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர் , ராமநாதபுரம் , திருத்துறைப்பூண்டி , பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. அளவான மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், அடை மழை பயிர்களை நாசம் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மழையின் காரணமாக வீடிடிந்து விழுந்து கர்ப்பிணி மனைவியின் கணவர் உயிரிழந்த சம்பவம் வேதனையின் உச்சம்.
Samayam Tamil sanmugaraj and sangeetha


ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (20). கூலி தொழில் செய்து வந்துள்ளார். சண்முகராஜ் வீட்டுக்கு அருகிலேயே அவரது மாமா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சண்முகராஜும், மாமன் மகள் சங்கீதாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் மறுத்துவிடுவார்களோ என்ற பயத்தினால் இருவரும் வேறொரு ஊருக்கு சென்று திருமணம் செய்துகொண்டு வாடகை வீடெடுத்து வசித்து வந்தனர்.

சில காலங்கள் சென்ற பின்னர் உறவினர்கள் மனம் மாறி இவர்களை ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து சண்முகராஜ் மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் எம்ஜிஆர் நகருக்கு வந்துவிட்டார். உறவினர்களின் படை சூழ மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த சண்முகராஜுக்கு கடந்த 9 ஆம் தேதி இன்ப செய்தி ஒன்று வந்தது. சங்கீதா தாய்மை அடைந்த செய்திதான் அது. ஆனால் அந்த சந்தோசம் இரண்டு நாட்கள்கூட நீடிக்கவில்லை.

கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு பொருட்களை ஏற்றும் வேலைக்காக சண்முகராஜ் கிளம்பியுள்ளார். அப்போது, மனைவியை மாமன் வீட்டில் உறங்க சொல்லிவிட்டு சண்முகராஜ் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் காலை 5 மணிக்கு வீடு திரும்பிய சண்முகராஜ் , மாமன் வீட்டில் இருந்து மனைவியை அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.

கேஸ் சிலிண்டர் புக்கிங்: தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அப்போது, மழை பெய்ததால், இருவரும் நனைந்து விட்டனர். தலையை துவட்டுவதற்காக வீட்டில் இருந்த டவலை எடுக்க சங்கீதா உள்ளே சென்றுள்ளார். அப்போது, வீட்டின் கூரை இடிந்து சரியும் சத்தம் கேட்கவே, மனைவியை அவசரமாக வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டுள்ளார். ஆனால், சண்முகராஜ் வெளியே வருவதற்குள் அருகிலிருந்த இரண்டு வீடுகளும் நொடி பொழுதில் அடுத்தடுத்து சரிந்து விழுந்துள்ளது.

இதனால் இடிபாடுகளில் சிக்கிய சண்முகராஜ் இருக்கும் இடம் காணவில்லை. உடனே அக்கம் பக்கத்தினரின் இடிபாடுகளை நீக்கி சண்முகராஜை மீட்க முயற்சித்தனர். ஆனால், அவரை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. கர்ப்பிணி மனைவியை காப்பாற்றிவிட்டு தன் உயிரை விட்ட சண்முகராஜின் மரண சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி