ஆப்நகரம்

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு ஒரேநாளில் 5 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 5 Nov 2018, 1:41 pm
தமிழகத்தில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil dengue
தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு ஒரேநாளில் 5 பேர் உயிரிழப்பு!


கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 2 வாரத்தில் 18-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த பொன்னுசாமியின் மனைவி வளர்மதி(55), பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார்.

இதேபோல், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த முருகன் என்பவரது ஒரு வயது மகன் சக்திவேல், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டியராஜன் (வயது 49) என்ற கட்டிடத் தொழிலாயும், முத்துசெல்வி (32) என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதனிடையே திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் கவிதா(24) என்ற பெண், டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலக்கு ஒருவரும், வைரஸ் காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 10 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 8 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 120 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர்.

ஆய்வின் போது வார்டுகள் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. எனவே வார்டு மேற்பார்வையாளர்கள் உள்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி