ஆப்நகரம்

இப்ப தான் புரியுது; அதிமுக - திமுக மறைமுக கூட்டுச் சதி செய்றாங்கனு; டிடிவி தினகரன் பகீர்!

சென்னை: இடைத்தேர்தல் ரத்தான விவகாரத்தில் அதிமுக, திமுக கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 11 Jan 2019, 9:19 am
திமுக தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு, ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil TTV Dinakaran


இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து விடுவோம் என்ற பயத்தில், இருவரும் மறைமுகமாக கூட்டுச் சேர்ந்து, தேர்தலை நிறுத்தி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை.

எனவே டெபாசிட் இழந்து விடுவோம் என்று ஆளுங்கட்சி அச்சம் ஏற்பட்டுள்ளது. தனது தந்தையின் தொகுதியில் தோற்றுவிடுமோ என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். கூட்டுறவு சங்க பதவிகளில் 60:40 என அதிமுக மற்றும் திமுக மறைமுக புரிந்துணர்வில் செயல்பட்டு வருகின்றன.

திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியிடம் இருந்து ஒப்பந்தங்கள் பெற்று வருகின்றனர். எனவே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதற்கு இரு கட்சிகளும் தான் காரணம். தேர்தல் மட்டும் நடந்திருந்தால், அமமுகவிற்கு பொங்கல் பரிசாக அமைந்திருக்கும் என்று கூறினார்.

அடுத்த செய்தி