ஆப்நகரம்

அதிமுக ஆட்சிக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை: எம்.எல்.ஏ-க்கள் விளக்கம்

சென்னை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தர்மம், நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 6 May 2019, 1:13 pm
அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய வழக்கில் தர்மம் வென்றது, நீதி வென்றது என்று சொல்லக் கூடிய வகையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தர்மம் வென்றது, நீதி வென்றது- அதிமுக எம்.எல்.ஏக்கள் விளக்கம்
தர்மம் வென்றது, நீதி வென்றது- அதிமுக எம்.எல்.ஏக்கள் விளக்கம்


சென்னை சேப்பாக்கத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரத்தினசபாபதி, சபாநாயகர் அனுப்பி நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தர்மம் வென்றது, நீதி வென்றது என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது.

எங்களை வெற்றிபெறச் செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்த அரசைக் காப்பாற்றவே கடந்த முறை நம்பிக்கை தீர்மானத்தின் போது வாக்களித்தோம். இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வரை வழங்கப்பட்டது.

இந்த ஆட்சிக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிரோகவோ செயல்பட்டதாக எங்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முதல்வர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தவர்கள் நாங்கள். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பாடுபட்ட எங்களுக்கு கிடைத்த பிரசுதான் சபாநாயகரின் நோட்டீஸ் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ கலைச்செல்வன், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உடன்பட்டு செயல்படுவோம். இந்த அரசுக்கு ஆதரவாகத்தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இரட்டை இலை எங்கியிருக்கிறதோ அங்கு தான் நாங்கள் இருப்போம் என்றார்.

மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் பிரபு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் நிலைபாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி