ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: முக்கிய நபரை சுற்றி வளைத்த சிபிசிஐடி!

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் முக்கிய நபர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 26 Jan 2020, 1:52 pm
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக அரசுப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மோசடி நடந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil TNPSC


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது.

குரூப் 4 தேர்வு விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் இன்னும் யாரெல்லாம் சிக்கப்போறாங்களோ?

இதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய பலர் தரவரிசை பட்டியலில் அதிக இடம்பிடித்திருந்தது தெரியவந்தது.

இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் உதவியை டிஎன்பிஎஸ்சி நாடியது. இதையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதில் 99 தேர்வர்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வாழ்நாள் தடைவிதித்து கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

குடியரசு தினம் 2020: தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

இரண்டு வட்டாட்சியர்கள் உட்பட 10 பேரிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், இடைத்தரகர் ராஜசேகர், தேர்வு எழுதிய நிதிஷ்குமார், நெல்லை ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இயங்கி வரும் முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக உள்ள தேர்வர் முத்துராமலிங்கம் உள்பட பலர் இந்நிறுவனத்தில் படித்தது அம்பலமாகி இருக்கிறது.

ஏற்கனவே வங்கி தேர்வு முறைகேட்டில் சிக்கிய நிறுவனம் தற்போது குரூப் 4 தேர்வு முறைகேட்டிலும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் 4 முறைகேடு விசாரணை விறுவிறுப்பு அடைந்துள்ளது.

அடுத்த செய்தி