ஆப்நகரம்

இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை இறக்கும் அதிமுக

சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என்று பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் இன்று அறிவித்தார்.

Samayam Tamil 4 Oct 2019, 4:08 pm
இடைத்தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி கடந்த சில நாள்களாக தமிழக அரசியல் வட்டாரங்களில் சுற்றிவந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடர்ந்து கூட்டணியில் குழப்பம் இல்லை என்று கூறிவந்தனர். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனோ அவர்கள் எங்களிடம் இதுவரை ஆதரவு கேட்கவில்லை, ஆதரவு கொடுப்பது தொடர்பாக எங்கள் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
Samayam Tamil Untitled collage (2)


அதிமுக தரப்பிலிருந்து தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளிடம் நேரடியாகச் சென்று ஆதரவு கேட்டநிலையில் பாஜகவிடம் ஆதரவு கேட்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தமிழக பாஜக அலுவலகம் சென்று பொன்.ராதா கிருஷ்ணனை சந்தித்தார். அப்போது பாஜக தரப்பில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

சந்திப்பு முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்ராதா கிருஷ்ணன், “அதிமுக தரப்பிலிருந்து பாஜகவின் அகில இந்திய தலைமையைச் சந்தித்து ஏற்கெனவே ஆதரவு கேட்கப்பட்டது. ஆதரவு தெரிவிப்பதாக எங்கள் தலைமை முடிவெடுத்துள்ளது. மரியாதை நிமித்தமாக அமைச்சர் ஜெயக்குமார் இங்கு வந்து ஆதரவு கேட்டார். மக்களவைத் தேர்தலிலிருந்தே எங்கள் கூட்டணி தொடர்ந்து வருகிறது. இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது, “இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை பாஜக ஆதரிக்கும். இரு தரப்பு கருத்துக்களும் பரிமாறப்பட்டது” என்றார். வேலூர் மக்களவைத் தேர்தலின் போது பாஜக தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரவில்லையே, இடைத் தேர்தலில் பாஜக தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வருவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “வேலூரில் கழகம் போட்டியிடவில்லை, கழகம் சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். அது வேறு, இது வேறு. இடைத் தேர்தலில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்” என்றார்.

அடுத்த செய்தி