ஆப்நகரம்

சசிகலாவுக்கு ஓபிஎஸ் க்ரீன் சிக்னல்: எடப்பாடிக்கு எதிராக திரும்பிய தெற்கு!

சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பேசிய பேச்சு அதிமுகவுக்குள் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.

Samayam Tamil 25 Oct 2021, 4:07 pm
சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sasikala eps ops


அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கிய சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது.

அக்டோபர் 16ஆம் தேதி சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தியது, 17ஆம் தேதி எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்று அதிமுக கொடியை ஏற்றி, ‘பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு வைத்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை சூடாக்கியது.

சசிகலா இன்னொரு ஜானகியா, அடுத்த ஜெயலலிதாவா?

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் குரலாக ஒலிக்கும் ஜெயக்குமாரும், சி.வி.சண்முகமும் தங்களுக்கேயுரிய பாணியில் காட்டமாக பதிலளித்தனர். பட்டும் படாமலும் பேசிவந்த எடப்பாடி பழனிசாமியும் ‘சூரியனைப் பார்த்து ஏதாவது’ என சசிகலாவை மிக மோசமாக விமர்சித்தார். சசிகலாவின் நடவடிக்கைகள் அதிமுகவுக்குள் புயலைக் கிளப்பத் தொடங்கிவிட்டன என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் சசிகலாவுக்கு ஆதரவுத் தளம் அதிகம் உள்ள தென் மாவட்டத்தில் அவருக்கு ஆதரவாக எந்த குரலும் அதிமுகவுக்குள் எழாமல் இருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் புதிய திரியை கொளுத்தியுள்ளார்.
அண்ணாமலையை புகழும் அதிமுக: காரணம் திமுகவா, சசிகலாவா?
“சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். எந்தப் பதவியில் இருந்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும்” என ஓபிஎஸ் பேசியுள்ளார்.

சசிகலாவை கட்சிக்குள் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி தரப்பு முழங்கிக் கொண்டிருக்க, ஓபிஎஸ்ஸோ தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று கூறியிருப்பது சசிகலாவுக்காக க்ரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கும் குட்டு வைப்பது போல் ‘யாராக இருந்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும்’ என சொல்லியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்ஸின் இந்த பேச்சு மட்டுமல்லாமல் அவர் எங்கே, யாருடன் இணைந்து இந்த பேட்டியை கொடுத்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தேவர் ஜெயந்திக்காக மதுரை அண்ணாநகர் வங்கியில் உள்ள தங்கக் கவசத்தை கையெழுத்திட்டு பெறுவதற்காக வந்த போதுதான் ஓபிஎஸ் இதை கூறியுள்ளார். அவருடன் தென் மண்டல அதிமுகவின் முக்கிய புள்ளிகளான திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவின் தென் மண்டலத்தில் ஒரு அணி கட்டப்படுகிறதா, அதற்கு ஓபிஎஸ் தலைமை தாங்குகிறாரா என்ற கேள்வியை இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி