ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் காய்கறி, பழக் கடைகள் அடைப்பு... எப்போ தெரியுமா?

கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Aug 2020, 3:54 pm
நாடு முழுக்க கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் கலையரங்குகள் என மக்கள் கூடுவதற்கான வாய்ப்புள்ள பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழச் சந்தையான சென்னை கோயம்பேடு மார்க்கெட்டும் பூட்டப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தில் கொரோனா பரவலின் மையமாக சென்னை இருந்த நிலையில், சென்னையின் கொரோனா பரவல் மையமாக கோயம்பேடு சந்தை இருந்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு கொரோனா பரவியதற்கான முக்கியக் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் பார்க்கப்பட்டது. இதனையடுத்து, கோயம்பேடு சந்தை பூட்டப்பட்டு திருமழிசையில் தற்காலிகமாக ஒரு சந்தை ஏற்படுத்தப்பட்டது. எனினும் கோயம்பேடு பூட்டப்பட்டதால் வியாபாரிகள் இழந்த வாழ்வாதாரத்தை, திருமழிசை சந்தையால் திருப்பித்தரவோ, குறைந்தபட்சம் ஈடு செய்யவோ கூட முடியவில்லை.

இதற்கிடையில் அண்மையில் பெய்த மழையால், திருமழிசை சந்தையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறிப்போனது.

இதன் விளைவாக, மீண்டும் கோயம்பேடு சந்தையைத் திறப்பது குறித்து பேச்சு எழத்தொடங்கியது. ஆனால், கொரோனா முடிந்த பிறகு மட்டுமே கோயம்பேடு சந்தையைத் திறப்பது தொடர்பாக பேச வேண்டும் என்று தமிழக அரசு இன்று அறிவித்தது.

நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்துங்க... மோடிக்கு ஃபோன் போட்டு சொன்ன ஸ்டாலின்!!


இதனையடுத்து, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் சார்பாக முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி