ஆப்நகரம்

இன்ஜினியரிங் படிப்பில் பகவத் கீதை கட்டாய பாடமா? இல்லையே என்கிறார் அண்ணா பல்கலை. துணைவேந்தர்

பொறியியல் பட்டப்படிப்பில் பகவத் கீதை ஒரு கட்டாய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மறுத்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2019, 6:50 pm
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம், குரோம்பேட்டை வளாகம் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil auvc


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவுறுத்தலின்படி, இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாணலர்கள் பொறியியல் படிப்பில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் மூன்றாவது பருவத்தில் ஆறாவது பாடமாக தத்துவவியல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பகவத் கீதை கற்றுத்தர வேண்டும் என பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விருப்பப் பாடமாக அல்லாமல் கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மூன்றாவது பருவத்திலேயே இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "கல்வியை காவிமயமாக்கும் பாஜகவின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறி்த்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா லிளக்கம் அளித்துள்ளார்.

"இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனலே அதிக பாடங்களை படித்து வருவதால், அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்ற விரும்பவில்லை. எனவே, சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையை கட்டாய பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி