ஆப்நகரம்

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் நிகழ்ச்சி: முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

போலி டாக்டர் பட்டம் வழங்கிய ராஜு ஹரிஷின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 4 Mar 2023, 2:38 pm
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ராஜு ஹரிஷின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madras hc


சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பிப்ரவரி 26ஆம் தேதி விருது வழங்கும் விழாவை நடத்தியது.

பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம்!

அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

மாஜி அமைச்சர்களுக்கு சிக்கல்: ஸ்டாலின் கொடுத்த சிக்னல் - பாயத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை!

அண்ணா பல்கலைக்கழகம் இடம் வழங்கியது எப்படி?

தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

7 பிரிவுகளின் கீழ் வழக்கு!

அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், படிக்க இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவது, மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியில் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், இதேபோன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நடந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் மனுவில் தெரிவித்து உள்ளார்.
வதந்தி பரப்பிய நான்கு பேர்: தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டை - ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை!
முன் ஜாமீன் வழங்க மனு!

தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், மார்ச் 1ஆம் தேதி தன்னை கைது செய்யும் நோக்கத்துடன் விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார். காவல்துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறி, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணை வந்தபோது காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார்

மனு தள்ளுபடி!

காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி