ஆப்நகரம்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு நாளை சென்னை வரவுள்ளது

Samayam Tamil 7 Jul 2020, 2:22 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,14,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் இந்த நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதற்காக மத்திய அரசு குழுக்களை அமைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல், கொரோனா தொற்றால் உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு சென்னை வரவுள்ளது. பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மத்தியக்குழு நாளை மாலை சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் - தமிழக அரசு தகவல்!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான குழு தமிழகத்தில் தொற்று பரவல், கொரோனா தொற்றால் உயிரிழப்பு, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது. கொரோனா நிலவரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடனும் மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் இக்குழுவினர் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற நகரங்களுக்கு செல்லும் மத்திய குழுவினரும் அந்தந்த மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என தெரிகிறது.

அடுத்த செய்தி