ஆப்நகரம்

சைனிக் பள்ளியை யார் நடத்துவது? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

நாடு முழுவதும் இயங்கி வரும் 28 சைனிக் பள்ளிகளை ராணுவ அமைச்சகமே ஏற்று நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2019, 1:37 pm
இந்திய ராணுவத்துக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 28 சைனிக் பள்ளிகளை, ராணுவ அமைச்சகம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், அமராவதி நகரில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாநில ஓய்வூதிய சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசே ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ராணுவ அமைச்சகம், தமிழக அரசுக்கு கடந்த 2006 கடிதம் அனுப்பியது.
Samayam Tamil Untitled collage (8)


இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட உத்தரவிடக் கோரி கொடைக்கானல், பூலாத்தூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சைனிக் பள்ளிகளை திறமையாக நடத்தவும், அவற்றை மேம்படுத்தவும், நாட்டில் உள்ள 28 சைனிக் பள்ளிகளை ராணுவ அமைச்சகமே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், மகாராஷ்ட்டிரம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தமிழக அரசு கையெழுத்திடாததால், அமராவதி பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய 2.30 கோடி ரூபாய் பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளதாகவும், இது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தலை மீதே விழும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, ராணுவ அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தமிழக தலைமைச் செயலாளர், சைனிக் பள்ளி சங்க செயலாளர், அமராவதி நகர் பள்ளி முதல்வர் ஆகியோர் நவம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

அடுத்த செய்தி