ஆப்நகரம்

சுபஸ்ரீ மரணம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.!

சுபஸ்ரீ மரணம் குறித்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 23 Sep 2019, 1:14 pm
சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த 12 ஆம் தேதி டூ வீலரில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது சாலையிலிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
Samayam Tamil 1


இந்த விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர், பேனர் அச்சிட்டவர் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசார், பேனர் அமைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருக்கின்றனர். மேலும் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்னரே ஜெயகோபால் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

கடந்த 13 ஆம் தேதி சுபஸ்ரீயின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சத்தை உடனே வழங்குமாறும் உத்தரவிட்டனர்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தனக்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் ஏன் இந்த வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வில்லை அரசு தரப்பின் மீது சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு இரண்டு நீதிபதிகள் அமர்வில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிலளிக்கக் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நீதிபதி கால அவகாசம் தர மறுத்து நாளை மறுதினத்திற்குள் பதிலளிக்க வேண்டு என அரசு தரப்பிடம் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி