ஆப்நகரம்

ஊரடங்கு உத்தரவை உதாசீனப்படுத்தினால் பைக், கார் பறிமுதல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஊரடங்கு உத்தரவை உதாசீனப்படுத்துவோரின் வாகனங்களை போலீஸார் தயவுதாட்சண்யம் இன்றி பறிமுதல் செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 10 Apr 2020, 1:01 am
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமலில் உள்ளது.
Samayam Tamil chennai police


இருப்பினும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக, தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதியம் 1 மணிக்கு மேலும் தேவையின்றி பலர் வாகனங்களில் பொது இடங்களில் சுற்றித் திரிகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது தமிழகத்தில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கபசுர கசாயம் மக்களுக்கு வழங்க உத்தரவிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், " 144 தடை உத்தரவை மீறி, வெளியே அனாவசியமாக சுற்றிதிரிபவர்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறும் விதத்தில் செயல்படுவோர் குறித்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிர்வாகத்துக்கு போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும். இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்" என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும், வழக்கம்போல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்டுள்ள ஆணையை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி