ஆப்நகரம்

க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு: ஸ்டாலின் ஏற்ற உறுதிமொழி!

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 19 Dec 2022, 12:25 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.12.2022) சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில், டி.பி.ஐ. வளாகத்திற்கு “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினைத் திறந்து வைத்தார்.
Samayam Tamil mk stalin anbalagan arch


தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் என்று 30.11.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையினை திறந்து வைத்தார்.
பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் சூப்பர் முடிவு?
மேலும், பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தின் நுழைவு வாயில் எண் 2-ல் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் பெயர் பலகை ஆகியவை 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மாநில சுயாட்சி - மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர் அவர்கள். இன்று இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக் குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கிறது. அகில இந்தியக் கட்சிகளே மாநில சுயாட்சிக் கொள்கைகளைப் பேசத் தொடங்கி இருக்கும் காட்சியை இப்போது பார்க்கிறோம். நூற்றாண்டு விழா காணும் காலத்தில் பேராசிரியரின் பெரும்பாலான கனவுகள், பெரும்பாலானவர்களின் கனவுகளாக விரிவடைந்து வருகின்றன.
பெரியப்பாவுக்கு நூற்றாண்டு விழா எடுத்து அழகு பார்த்த முதல்வர் ஸ்டாலின்
''ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!" என்று வேண்டுகோள் வைத்தார் பேராசிரியர் அவர்கள். இதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி