ஆப்நகரம்

முதல்வர் பழனிசாமியும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது - கமல்

நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு கமல் கொடுத்த பதில்

Samayam Tamil 17 Dec 2020, 7:41 pm
அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். தொடர்ந்து அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், கொரனோ நோய் தடுப்புப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
Samayam Tamil file pic


இதனை தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகள்,விவசாய சங்க பிரநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுனருடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைக்கு விவசாயிகள் நிலம் கொடுக்க தயாராக இல்லை என்றும், அவ்வாறு கொடுத்தால் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய முதல்வர், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், கமல்ஹாசன் நடித்த படங்களை மக்கள் பார்த்தால் அவ்வளவுதான்.

கொங்கு பெல்ட்டை வலைக்க சத்யராஜ் மகளை களமிறக்கும் திமுக!?

நடித்து ஒய்வு பெற்ற பிறகு கமல் அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதான அவருக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார். சட்ட சபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் கமலை பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து முதல்வர் விமர்சித்ததது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு கமலஹாசன் டிவிட்டரில், '' முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என கிண்டலாக பதிவிட்டுள்ளார். மேலும் தனது பிரச்சாரங்களில் எம்ஜிஆரை ஒப்பிட்டுக்கொள்ளும் கமல் எம்ஜிஆரின் பாடல் வரிகளை ட்வீட்டியுள்ளார்.

அந்த பதிவில், '' `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என இந்த பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி