ஆப்நகரம்

Gaja Cyclone: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

கடலூர், தஞ்சை, விருத்தாச்சலம், அதிராம்பட்டினம் பகுதிகளில் கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Nov 2018, 11:41 am
கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil cm
Gaja Cyclone: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!


வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடலூர், தஞ்சை, விருத்தாச்சலம், அதிராம்பட்டினம் பகுதிகளில் கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்.

தமிழகத்தில் இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை நின்ற பிறகு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செய்யப்படும். நிவாரண முகாம்களில் 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அடுத்த செய்தி